தினமும், தவிடு, பொட்டு, புல், வைக்கோல், வைட்டமின் சத்துக்கள் வழங்கி வருகிறோம். மாடுகளை, தினமும் குளிப்பாட்டி, தேவையான பராமரிப்புகளை செய்கிறோம்.அத்துடன், கால்கள், வால்கள் வெட்டப்பட்ட நிலையில், சாலையில் கிடக்கும் மாடுகள், கைவிடப்பட்ட காளைகள், எருமைகள், அடிமாட்டுக்காக கடத்தப்பட்டு, 'புளூ கிராஸ்' அமைப்பால் மீட்கப்படும் மாடுகள், தீ விபத்தால் பாதிக்கப்படுபவை என, பலவிதமான பாதிப்புகளுடன், கால்நடைகள் இங்கு வருகின்றன.
அவற்றால், இங்குள்ள கால்நடைகளுக்கு, நோய்த்தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக, கால்நடை மருத்துவர் பிரியா, அவற்றை பரிசோதிப்பார்; தேவையான ஊசி, மருந்துகளை வழங்கபரிந்துரைப்பார்.அவர் ஆலோசனைப்படி, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து, அவற்றை காப்போம். ஈன்ற பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கூட, மருத்துவ உதவி தேவைப்படும்.
இந்த பணி செய்வதற்காக, எந்த சிரமமும் படவில்லை. முழு மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும் தான் செய்கிறேன். ஆனாலும், போதிய நிதி இல்லாமல், அவ்வப்போது கஷ்டப்பட வேண்டி உள்ளது.அதேபோல், தற்போது தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது. ஆனாலும், எனக்கு, காஞ்சி மகா பெரியவர், கஞ்சன்காடு ஆனந்த ஆசிரமம் பப்பா ராமதாஸ் சுவாமிகள், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை ஆகியோரின் ஆசி, எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.
அதனால், கடந்த கோடையில், உள்ளூர் மக்களே, வறட்சியிலிருந்து மாடுகளைக் காக்கத் தேவையான உதவிகளை செய்தனர். இப்படி, மலை போல் வரும் சிரமங்கள் எல்லாம், பனி போல் மறைந்துவிட, என், ஆன்மிக ஈடுபாடு தான் காரணம்.